மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் கண்டுபிடிப்பு

மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் கண்டுபிடிப்பு
மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் கண்டுபிடிப்பு
Published on

அண்டார்டிகாவில் புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா, பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் குளிரும் அதீதமாக இருக்கும் ஓர் கண்டமாகும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. வருடத்திற்கு 1,000 முதல் 5,000 பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கி இருக்கிறார்கள். இதனிடையே அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகளாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்களின் துகள்கள் தென்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  

நியூசிலாந்தில் உள்ள  ஆராய்ச்சியாளர்கள், அண்டார்டிகாவில் உள்ள 19 இடங்களில் இருந்து மாதிரிகளை  சேகரித்துள்ளனர். அதில் ஒவ்வொன்றிலும் சிறிய நெகிழித் துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பனியில், சராசரியாக 29 நெகிழி துகள்கள் இருந்துள்ளது. பெரும்பாலும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்கள் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில் நெகிழி  துகள்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவை ஆழமான பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. இந்த நெகிழி துகள்கள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அண்டார்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தென்படுவதால் உலக அளவில் மாசின் அளவு அதிகரித்திருக்க வாய்ப்புள்ளதாக 'க்ரீன் பீஸ்' ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.

பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் அண்டார்டிகாவில் புவி வெப்பமயமாதலால் இங்குள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் அண்டார்டிகாவில் பிளாஸ்டிக் மாசுவும் கண்டறியப்பட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: சுற்றுச்சூழல் செயல்திறனில் மோசமான நிலை - கடைசி இடம் பிடித்த இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com