அமெரிக்காவின் மியாமியில், அடுக்குமாடி குடியிருப்பொன்று சரிந்து விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில், 150-க்கும் மேற்பட்டோர் உள்ளுக்குள் சிக்கியுள்ளனர். உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. தீயணைப்பு வீரர்கள், முழு முயற்சியில் அனைவரையும் மீட்கும் பணியில் 24 மணி நேரமும் அங்கு செயல்பட்டு வருகின்றனர்.
இந்த கட்டட சரிவின்போது, நான்கு மாடிகள் கீழ்நோக்கி விழுந்த தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இடையில் சில பொருட்களை தாங்கி, தன்னையும் தன் மகளையும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றியது, அந்த தாய்தான். அங்கிருந்து வெளியே வந்தவரை, மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஏஞ்சலா என்ற அந்த தாய், தனது 16 வயது மகள் டெவான்னுடன் 9 வது மாடியிலிருந்து, 5-வது மாடிக்கு சரிந்து விழுந்திருக்கின்றார். அங்கிருந்துதான் தன்னையும் மகளையும் வெளியே இழுத்திருக்கிறார்.
இடையிடையே சிக்கியதில், அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முயற்சியில் கொஞ்சம் கூட பின் தளராமல் தன்னுடைய முழு முயற்சியையும் போட்டு தன்னையும் தன் மகளையும் கட்டடத்திலிருந்து வெளிக்கொணர்ந்துள்ளார் ஏஞ்சலா. இருவருக்கும் தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. தாயும், மகளும் நலமாக சிகிச்சை எடுத்துவரும் நிலையில், தந்தை மட்டும் தற்போது இடிபாட்டுக்குள் சிக்கியுள்ளார். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்துக்கு வெளியே அழுகுரலும், உள்ளே காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோளும் ஒருசேர எழுந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஏஞ்சலாவின் துணிச்சல் பலருக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது.