மெக்சிகோவில் காவல்துறைத் தலைவரைச் சுட்டுக்கொல்ல முயற்சி - மூவர் உயிரிழப்பு 

மெக்சிகோவில் காவல்துறைத் தலைவரைச் சுட்டுக்கொல்ல முயற்சி - மூவர் உயிரிழப்பு 
மெக்சிகோவில் காவல்துறைத் தலைவரைச் சுட்டுக்கொல்ல முயற்சி - மூவர் உயிரிழப்பு 
Published on
மெக்சிகோவில், காவல்துறைத் தலைவரைச் சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியின் நடுவே  அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள லோமாஸ் டி ச்சப்புல்டெக் என்ற பகுதியில், பெரும் செல்வந்தர்களும் பல்வேறு நாடுகளின் தூதர்களும் வசித்து வருகின்றனர். இது போதைப்பொருள் தாராளமாகப் புழங்கும் இடம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், அந்தப் பகுதிக்குக் கனரக வாகனம் ஒன்றில் வந்த போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், மற்றொரு வாகனத்தில் வந்த மெக்சிகோ சிட்டி பொது பாதுகாப்புத் தலைவர் ஓமர் கார்ஸியா ஹார்ஃபச்சை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது பாதுகாவலர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலுக்குப் பதிலடி கொடுத்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. காவல்துறை அதிகாரி ஓமர் கார்சியா வந்த காரை போதை மருந்து கடத்தல்காரர்கள் சல்லடையாகத் துளைத்தனர். இதில்,‌ ஓமர் கார்சியா மீது மூன்று குண்டுகள் பாய்ந்தன. அப்போது காவல்துறை உயரதிகாரியின் பாதுகாவலர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் பணி முடித்து அவ்வழியாக வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணும் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல்துறைத் தலைவர் ஓமர் கார்ஸியா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தன் மீதான தாக்குதலுக்கு ஜலிஸ்கோ நியூ ஜெனரேசன் கார்ட்டெல் எனப்படும் போதை மருந்து கடத்தல் கும்பலே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களது செயல் கோழைத்தனமானது என்றும் அவர் சாடியுள்ளார். இதனிடையே மெக்சிகோ சிட்டியின் காவல்துறைத் தலைவரைச் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com