காணாமல் போன கல்யாண மோதிரத்தைத் தேடியவருக்கு தங்க நாணயங்கள் புதையலாகக் கிடைத்தது, இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட்யார்க்ஷையரில் உள்ள கீஹ்லே பகுதியை சேர்ந்தவர் பால் ரேநார்ட் (44). இவர் தனது நண்பர் மைக்கேலுடன், நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாலிகேஸுக்கு விடுமுறையை கொண்டாட சென்றார். அதன் அருகில் அவர்களின் நண்பரின் விவசாய நிலம் இருந்தது.
அங்குச் சுற்றிக்கொண்டிருக்கும்போது, தனது திருமண மோதிரத்தைத் தொலைத்து விட்டார் பால். இதையடுத்து மைக்கேலும் பாலும் அதைத் தேடினர். பால், மெட்டல் டிடெக்டர் உதவியோடு தேடினார். அப்போதுதான் அவருக்கு அந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு இடத்தில் டிடெக்டர் வித்தியாசமான ஒலி எழுப்ப, அங்கு தோண்டினார் பால். உள்ளே பழங்கால தங்க நாணயங்கள் கிடைத்தன. எடுத்து எண்ணினார், மொத்தம் 84 நாணயங்கள்! இதன் இந்திய மதிப்பு சுமார் 92 லட்சம் ரூபாய். ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது பாலுக்கு. உடனே தனது நண்பரிடம் இந்த தகவலைத் தெரிவிக்க, அவரும் ஹேப்பி!
‘திடீரென்று லாட்டரியில் உங்கள் நம்பர் இருப்பதைக் கண்டால் எப்படியிருக்கும்? அப்படியொரு மனநிலை எனக்கு. என் கைகள் அதைக் கண்டதும் நடுங்கின. இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை’ என்கிறார் பால்.