கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் மெட்டா நிறுவனத்தைச் சேர்ந்த 24 ஊழியர்கள், பற்பசை, சலவை சோப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, வருவாயைத் தவறான முறையில் செலவிட்டதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைப் பெற்றிருக்கும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட், வாட்ஸ்அப் உள்ளிட்டவை அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்பக் குழுவான Meta கீழ் இயங்கி வருகின்றன. அந்த வகையில், மெட்டா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த 24 பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 25 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,101.26) உணவு கிரெடிட்டை வீட்டு உபயோகப் பொருட்களான இங்க், பற்பசை, சலவை சோப்பு மற்றும் ஒயின் கிளாஸ்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக சில ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பணிநீக்க நடவடிக்கை கடந்த வாரம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், இந்தப் பொருட்களைப் பெற்று அவர்களது வீட்டுக்கு அனுப்பிவைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு மெட்டா நிறுவனம் சுமார் 21,000 பேரை வீட்டுக்கு அனுப்பியது. அடுத்து, 11,000 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து 2023இல், 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவர் என மெட்டா தெரிவித்திருந்தது.