ஆபத்து எங்கும் இருக்கலாம்; நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படியிருக்கையில், இடத்தையும் வசதியைப் பொறுத்தும் சாதுர்யமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றிபெறலாம்; ஆபத்திலிருந்தும் தப்பிக்கலாம். அப்படியான ஒரு சம்பவம்தான் அர்ஜெண்டினாவில் நடைபெற்றுள்ளது.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் குவில்மெஸ் என்ற பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் இதைக் கவனித்தனர். இதைத் தொடர்ந்து அதில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழிறங்கி, அந்தப் பெண்ணிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் ஓடினார். அவர் ஓடிவருவதைக் கண்டதும் உஷாரான அந்த இளம்பெண் உடனடியாக தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்நபரை நோக்கி 3 முறை சுட்டுள்ளார்.
இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராத அந்த நபர் மீண்டும் பைக்கை நோக்கி ஓடினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து அவர்கள் தப்பினர். அதில் காயம்பட்ட நபர், மருத்துவமனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதில், சாதுர்யமாக செயல்பட்ட அந்த இளம்பெண் ஒரு காவலர் என்பதும், அன்றைய தினம் பணியில் இல்லாமல், பொதுமக்களில் ஒருவராக அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனினும், தற்காப்புக்காக தன்னுடன் துப்பாக்கியை அவர் எடுத்துச் சென்றிருக்கிறார். அதன்மூலம் தன்னிடம் இருந்த பொருளையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொண்ட இளம்பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.