ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இது கார் வெடிகுண்டு தாக்குதலாகவோ, மனித வெடிகுண்டு தாக்குதலாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 49 பேர் இறந்ததாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் மருத்துவ அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, 49 பேர் இறந்ததாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் இந்திய தூதரகத்தின் கதவு, ஜன்னல்கள் நொருங்கியதாகவும், தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெர்மன் தூதரகத்திற்கு மிக அருகிலும், இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிலும் நடந்த இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து, எந்தவிதமான செய்தியையும் ஆரம்பத்தில் ஆப்கன் அரசு வெளியிடவில்லை. மிக அதிக அளவிலான கரும்புகை பரவுவதை படம் பிடித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டபிறகு அந்நாட்டு அரசு குண்டுவெடிப்பு செய்தியை வெளியிட்டது. இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.