இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை காப்பாற்றிக்கொள்ள ராணுவத்திடம் கெஞ்சியதாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மர்யம் நவாஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார். தற்போது புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இதனிடையே, பிரதமர் பதவியை இழந்தது முதலாக எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை இம்ரான் கான் முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் லாகூரில் கூட்டம் ஒன்றில் பேசிய மர்யம் நவாஸ், இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை காப்பாற்றிக் கொள்ள கடைசி நிமிடம் வரை போராடியதாக குறிப்பிட்டார். பதவியில் தொடர்வதற்காக ராணுவத்திடம் உதவி கேட்டு இம்ரான் கெஞ்சியதாகவும், ஆனால் இதற்கு ராணுவம் மறுத்துவிட்டதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தன்போது தன்னைக் காப்பாற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரியிடமும் இம்ரான் கான் கெஞ்சியதாகவும் மர்யம் நவாஸ் பேசினார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மகள் மர்யம் நவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.