இந்தியாவிலிருந்து நியூசிலாந்து திரும்பிய நபர் ஒருவர் தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து தப்பித்து சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 3 ம் தேதி டெல்லியில் இருந்து ஆக்லாந்து திரும்பிய 32 வயது நபர் தனிமைப்படுத்தும் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனிமைப்படுத்தல் மையத்தை விட்டு வெளியேறி சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சுமார் 70 நிமிடங்கள் செலவழித்துவிட்டு மீண்டும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு ஆறு மாதம் சிறைதண்டனை அல்லது 1.96 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கூறுகையில், “அந்த நபர் உடல்நலம் மற்றும் அழகு பிரிவுகளில் அதிக நேரம் செலவிட்டார். மேலும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்” எனத் தெரிவித்தனர்.
நியூசிலாந்து சுகாதார அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், “புகைபிடிக்கும் பகுதி வழியாக அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து தப்பித்திருக்கலாம். சுகாதார அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த நபரிடம் விசாரணை செய்து வருகின்றனர்” என்று கூறினார்.