“பிரபல டேட்டிங் ஆப் ஒன்று, ‘இந்த செயலியில் 25 - 35 வயதிலுடைய பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர்’ எனக்கூறி என்னை மெம்பர்ஷிப் பெற வைத்து ஏமாற்றிவிட்டனர். அதில் பெண்கள் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது” எனக்கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ஒருவர்.
கடந்த சில வருடங்களாகவே சமூகத்தில் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்து வருகிறது. அப்படி அமெரிக்காவின் டென்வெர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் டேட்டிங் ஆப், தங்களிடம் 25 - 35 வயதிலுள்ள பெண் பயனர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என விளம்பரம் செய்துள்ளது. இதுபற்றி தங்கள் பயனாளர்களிடம் கூறி, அவர்களை மெம்பர்ஷிப் செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம். அப்படியான ஒரு பிரச்சாரத்தின் அடிப்படையில், 29 வயதான ஒரு பயனர் 9,409 டாலர் செலவிட்டு (இந்திய மதிப்பில் ரூ.7.05 லட்சம்) மெம்பர்ஷிப்பை பெற்றிருக்கிறார்.
மெம்பர்ஷிப் பெற்ற பிறகு பெண்கள் குறித்து தேடி பார்த்தபோது, அதில் மொத்தமே 18 - 35 வயதில் 5 பெண்கள்தான் இருந்துள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த அந்நபர், அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். குறிப்பாக அந்நபர் நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு கோரியுள்ளார். மேலும் “அவர்களது தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பெண்கள் மிகக் குறைவு. நிறுவனம் மோசடி தூண்டல் மற்றும் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கு உட்பட்டிருந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.