ஆப்ரேஷன் செய்யும் போது தவறுதலாக தொண்டையில் வைத்து தைக்கப்பட்ட முழு ‘பல் செட்’டை மருத்துவர்கள் கண்டுபிடித்த சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரத்தில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் 72 முதியவர் ஒருவர் வந்துள்ளார். மருத்துவர்களிடம் பிரச்னைகளை கூறிய அவர், தனக்கு இருமல் வரும்போது ரத்தம் வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும், எதையும் முழுங்குவது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு சில சோதனைகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். ஆனால் அனைத்தும் அவருக்கு சீராக இருக்க, பின்னர் தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த முதியவரின் தொண்டையில் முழு பல் செட் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக முதியவரிடம் விசாரித்தபோது, 8 நாட்களுக்கு முன்னர் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது. அப்போது தவறுதலாக அவரது பல் செட் உள்ளே வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.