வெளிநாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் நீர்யானைக்கு ஒருவர் பல் தேய்த்துவிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்தப் பொது முடக்கக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விலங்குகளின் சேட்டை மிகுந்த வீடியோக்கள் மக்களை பெரும்பாலும் மகிழ்வித்து வருகின்றன.
எப்போதும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் இருக்கும் பலரும் இந்தக் கொரோனா காலத்தில் விலங்குகளின் குறும்புச் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். பலருக்கும் இதுபோன்ற வீடியோக்கள் பெரும் ஆறுதலையும் சந்தோஷத்தையும் தந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. இப்போது அதேபோல பலரையும் ஆச்சரியப்படுத்தும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் வெளிநாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஊழியர் ஒருவர் அங்கு பராமரிக்கப்படும் நீர் யானைக்கு பல்களை தேய்த்து வருகிறார். அந்த நீர்யானையும் பொறுமையாக வாய் திறந்து காட்டிக் கொண்டு இருந்தது. இதனை பலரும் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளனர்.உலகிலேயே கணிக்க முடியாத வகையில் செயல்படக் கூடிய விலங்கு நீர்யானை. அது திடீரென தாக்கும். எனவே பூங்கா ஊழியரின் தைரியத்தை பாராட்டியே பலரும் பதிவிட்டு இருக்கின்றனர்.
விலங்குகளில் உருவத்தில் மூன்றாவது பெரிய விலங்கு நீர் யானை. இவற்றின் எடை 1600 கிலோ வரை இருக்கும். உடலின் நீளம் 1.5 மீட்டர் இருக்கும். உருண்டு, திரண்ட உருளை போன்ற உடல் அமைப்பு கொண்டது. இத்தனை பெரிய உடல் இருந்தாலும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் நீர்யானைகள் ஓடக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.