தாய்லாந்தில் இருக்கும் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள விலங்குகளுக்கு தடையை மீறி உணவளித்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நபரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பல நாடுகளில் வைரஸின் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக சுற்றுலா நகரமான தாய்லாந்தில் மே 30 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தியிருக்கிறது. மேலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 2947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 54 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.
இதன் காரணமாக அங்கு பொழுதுபோக்கு இடங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரியல் பூங்காவில் விலங்குகள் உணவில்லாமல் தவிக்குமோ என்று எண்ணிய ஆஸ்திரேலியர் ஒருவர், தடைகளை மீறி பூங்காவுக்குள் சென்று புலி, யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளித்துள்ளார். இதனையறிந்த தாய்லாந்து போலீஸார் அவரை கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மின் குயனும் அவரது நண்பர்களும் விலங்கியல் ஆர்வலர்கள். இவர்கள் தாய்லாந்து உயிரியல் பூங்காவுக்கு சென்று விசாரித்துள்ளனர். மேலும் உயிரியல் பூங்கா காப்பாளர்கள் அவர்களிடம் விலங்குகள் பூங்காவில் உணவில்லாமல் தவிக்கவில்லை. அவற்றை தொடர்ந்து பராமரித்தும் உணவளித்தும் வருகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் எப்படியோ உயிரியல் பூங்கா உள்ளே சென்ற மின் குழுவினர் விலங்குகளுக்கு உணவளித்து மகிழ்ந்துள்ளனர்.
இதனை இவர்கள் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் விலங்குகளுக்கு உணவளிக்க நிதியும் திரட்டியுள்ளனர், இவர்கள் 45 ஆயிரம் டாலர்கள் இதற்காக நன்கொடையாகவும் பெற்றுள்ளனர். தாய்லாந்து உயிரியல் பூங்காவில் உணவளித்த வீடியோவை பகிர்ந்ததை கண்ட பூங்காவின் நிறுவனர் காவல் துறையிடம் புகாரளித்துள்ளார். தடையை மீறி உயிரியல் பூங்காவுக்கு சென்றதன் காரணமாக தாய்லாந்து போலீஸார் மின் குழுவினரை கைது செய்துள்ளனர். ஆனால் மின் குழுவினர் உயிரியல் பூங்கா நிறுவனரின் தாய் அனுமதியுடன் சென்றதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.