கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்குள் குட்டி முதலைகள் மற்றும் மெக்சிகன் மணிகள் கொண்ட பல்லிகள் உட்பட 1,700க்கும் மேற்பட்ட ஊர்வனவற்றைக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் "ஜூலியோ ரோட்ரிக்ஸ்" என்றும் அழைக்கப்படும் ஜோஸ் மானுவல் பெரெஸ். பிப்ரவரி 25 அன்று மெக்ஸிகோவுடனான சான் யசிட்ரோ எல்லைக்கு வந்தார் பெரேஸ். எல்லை ரோந்து முகவர்கள் சுமார் 60 பல்லிகள் மற்றும் பாம்புகள் சிறிய பைகளில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவை பெரெஸின் ஜாக்கெட், பேன்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த விலங்குகள் தனது செல்லப்பிராணிகள் என்று பெரெஸ் முகவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை ஏற்க மறுத்த முகவர்கள் 30 வயதான பெரேஸை கைது செய்தனர். பிப்ரவரி 25 முதல் பெரெஸ் கூட்டாட்சிக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 2016 முதல் இந்த உயிரினங்கள் ஈடுபட்டு வருவதை கண்டுபிடித்தனர். இந்த உயிரினங்களை வாங்கவும் விற்கவும் சமூக வலைதளங்களை பெரெஸ் பயன்படுத்தியுள்ளார். கடத்தப்பட்ட ஊர்வனவற்றில் சில பாதுகாக்கப்பட்டவை மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1700 உயிரினங்களை பெரெஸ் கடத்தியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதை பெரேஸ் தனியாளாக செய்யவில்லை. பெரெஸ் மற்றும் அவரது சகோதரி மற்றும் நண்பர்கள் ஒரு கும்பலே இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது. உயிரினங்களை நாட்டின் எல்லைகளில் கடத்தி வரும் செயலை பெரேஸ் செய்து வந்துள்ளார். குறிப்பாக பெரெஸ் இல்லாத சமயங்களில் அவரது சகோதரி கடத்தல் தொழிலில் அவருக்கு உதவி செய்துள்ளார். விரைவில் சகோதரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என காவலர்கள் தெரிவித்தனர்.