ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே அந்நாட்டில் எக்கச்சக்கமான அடிப்படை மாற்றங்கள் தடாலடியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான, பெண்களை ஒடுக்கும் பல நடவடிக்கைகளை தாலிபான்கள் கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பல்கலைக்கழகங்களில் `இனி பெண்கள் கல்வி கற்க முடியாது’ என ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபைகள் வரை எதிரொலித்து உலகெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக தாலிபன் தலைமையிலான உயர் கல்வித்துறை அமைச்சர் நெடா முகமது நதீம் கையெழுத்திட்ட அந்த அரசாணையில், “மறு அறிவிப்பு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்பதை நிறுத்தி வைக்கவும். இதனை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்தவும்” என உத்தரவுகள் பறந்திருக்கிறது.
முதலில் கல்வி நிலையங்களில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே வகுப்பறைகள் வைக்கப்பட்டும், மேல்நிலை பள்ளிகளில் இருந்து மாணவிகள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டும் இருந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் தாலிபான்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்பு குரலும் எழுந்திருக்கின்றன.
அமெரிக்கா, ஐ.நா தொடங்கி, ஆப்கானிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் ராஷித் கானும் பெண் கல்வியை ஒடுக்கும் தாலிபான்களின் அடக்குமுறையை கண்டித்திருக்கிறார். இப்படி இருக்கையில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதை உறுதிபடுத்தக் கோரி அந்நாட்டு மாணவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
அதன்படி, பெண்களின் கல்வியை முடக்கும் தாலிபான்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள நங்கர்ஹார் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் தேர்வுகளை புறக்கணிக்கும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், பேராசிரியர்களும் பலரும் தங்களது வேலையை ராஜினாமாவும் செய்திருக்கிறார்கள். அந்த பதிவுகளில் ஆப்கானிய பெண்களை படிக்க விடுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோல, தாலிபான்களின் இந்த கல்வி தடையை அறிந்த அந்நாட்டுகள் மாணவிகள் பலரும் தங்களது எதிர்காலம் இப்படியாகிவிட்டதே என எண்ணி கதறி அழும் வீடியோக்களும் இதனூடே பகிரப்பட்டு வருகிறது.