செய்தியாளர்: பால வெற்றிவேல்
மலேசியா கப்பற்படையான ராயல் மலேசியன் கப்பற்படையின் 90-வது ஆண்டு விழா அடுத்த மாதம் பெராக் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மலேசிய கப்பற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலையிலிருந்து நடைபெற்றது. சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதியது.
அதில் HOM M503-3 மற்றும் M502-6 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்களிலும் பயணித்த பைலட் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். M502-6 ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்துள்ளது. மலேசிய கப்பற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மலேசியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் இறக்கை மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.