மலேசியா: வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை

மலேசியா: வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை
மலேசியா: வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை
Published on

வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 சவுக்கடியும் வழங்க மலேசியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியா, சிலாங்கூர் மாநிலம், சுங்கை வே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தந்தை தனது 12 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கு அந்நாட்டு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதில் தந்தை தனது வளர்ப்பு மகளை 2018-ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதிவரை கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளில் 105 முறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது நிரூபணமானது. மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் துன்புறுத்தியும் வந்திருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கின் மீதான பொது நலனைக் கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடுமையான காவல் தண்டனையும் சவுக்கடியும் தர வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசுந்தரி, குற்றவாளியான தந்தைக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 10 ஆண்டு வீதம் 1050 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 சவுக்கடியும் வழங்க உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை வாசிக்க, நீதிமன்றம் கிட்டதட்ட 5 மணி நேரம் எடுத்துக்கொண்டது.

இதுகுறித்து நீதிபதி கூறிய தீர்ப்பில், “சிறையில் இருக்கும்போது நீங்கள் மனம் திருந்துவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் ஒரு வன்முறைச் செயலைச் செய்யக்கூடாது. தண்டனை குறைந்தபட்சம் என்றாலும் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இது போதுமானது என்று நீதிமன்றம் கருதுகிறது.

இந்தக் குற்றம் கடுமையானது மட்டுமல்ல. அருவருப்பானதும் கூட. சிறுமியின் மாற்றாந்தாய் என்ற முறையில் அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரே சிறுமியின் மதிப்பை அழித்துவிட்டார். அவரது நடவடிக்கை பாதிக்கப்பட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். இது பயங்கரமான மற்றும் கண்டிக்கத்தக்க குற்றங்களாகும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து சிறுமியின் தாய் குற்றவாளியான தந்தையை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். பாலியல் வன்கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த சிறுமி தனது தாய் மற்றும் தங்கையுடன் அத்தை வீட்டிற்கு வந்த போது இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com