நிலையான ஆட்சி அமைவதில் தொடரும் சிக்கல்.. திடீரென கலைக்கப்பட்ட மலேசியா நாடாளுமன்றம்!

நிலையான ஆட்சி அமைவதில் தொடரும் சிக்கல்.. திடீரென கலைக்கப்பட்ட மலேசியா நாடாளுமன்றம்!
நிலையான ஆட்சி அமைவதில் தொடரும் சிக்கல்.. திடீரென கலைக்கப்பட்ட மலேசியா நாடாளுமன்றம்!
Published on

பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் பேரரசர் சுல்தான் அப்துல்லா ஒப்புதலுடன் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த 60 நாட்களுக்குள் மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் கடந்த இரண்டரை வருடங்களாக நிலையான ஆட்சி அமைக்கப்படுவதில் சிக்கல் இருந்து வருகிறது. மேலும் கொரோனா நெருக்கடியால் அந்நாடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. அடுத்த வருடம், அதாவது இன்னும் 9 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார்.

பேரரசர் சுல்தான் அப்துல்லாவிடம் நேற்று ஒப்புதல் வாங்கிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் அம்னோ கட்சியைச் சேர்ந்த பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப். நாட்டில் நிலையான ஆட்சியை அமைக்கவும், மக்களிடம் மரியாதை ஏற்படுத்தும் வகையிலான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்காகவும் ஆட்சியை கலைத்துள்ளதாகவும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த 60 நாட்களுக்குள் அதாவது டிசம்பர் 9-ம் தேதிக்குள் 15-வது நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதி மற்றும் மற்ற விஷயங்கள் குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார நெருக்கடி, அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ள பருவமழையால் வெள்ளம், பொது விழாக்கள் ஆகியவற்றை காரணங்களாக காட்டி தற்போது பொதுத் தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், தற்போது ஆட்சி நடத்திய அம்னோ கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதாக அழுத்தம் கொடுக்கப்பட்டு, பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை 700,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26.7 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்த புதிய வாக்காளர்களில் சுமார் 80 விழுக்காட்டினர், 30 வயதுக்குட்பட்டவர்கள். இதனால் தேர்தலில் இளம் வாக்காளர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com