நோபல் பரிசு பெற்ற பெண் உரிமைப் போராளியான மலாலா பதிவிட்ட ட்விட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி பின் மீண்டு வந்து, நோபல் பரிசையும் வென்ற மலாலா, தொடர்ந்து பெண்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளரான மாலிக் அஸ்ஸருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சிறு விஷயமொன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு அவரது கணவரும் மறு ட்விட்டைப் பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்த, அந்தப் பதிவில் மற்றவர்களும் இணைய வைரலாகி வருகிறது.
மலாலா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சோபாவில் சாக்ஸ் கிடந்தது. அஸ்ஸரிடம் (மலாலா கணவர்), ’இது உங்களுடையதா’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம், அது அழுக்காக இருக்கிறது. அதைத் தூக்கி வெளியில் எறிய வேண்டும்’ என்றார். நான் அதைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன்" என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டைப் பார்த்த மலாலாவின் கணவர் மாலிக் அஸ்ஸர், “சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? A. வெளியில் தூக்கி எறிய வேண்டும் B. குப்பைத்தொட்டியில் போட வேண்டும்” என இரண்டு ஆப்ஷன்களை வைத்து ஒரு கருத்துக்கணிப்பு பதிவைப் பகிர்ந்திருந்தார். இதற்கு பெரும்பாலும், "B. குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தனர்.
இதில் ஒருவர், “வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் உண்டு. மலாலாவைப்போலவே அவரது கணவரும் பொறுப்பாக இருக்க வேண்டும்” என மலாலாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவரோ, “நான் பலமுறை எனது கணவரிடம் அவரது பொருட்களை உரிய இடத்தில் வைக்குமாறு சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவே இல்லை. ஒருநாள் அவரது ஹாக்கி அன்டர்வேரும், சாக்ஸும் காணாமல் போய்விட்டது. அதன் பிறகுதான் அவர் ஒழுங்குக்கு வந்தார்” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ”வெல்கம் டு திருமண வாழ்க்கை” என வாழ்த்து தெரிவித்துள்ளார். மலாலா வெளியிட்ட இந்த ஒற்றை ட்வீட் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜெ.பிரகாஷ்