பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக பலுசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் கக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், பாகிஸ்தானின் நிதிநிலைமை மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில் அந்நாட்டைக் கடுமையாகச் சாடியிருந்தார். இதுகுறித்து அவ, ‘இந்தியா நிலவை அடைந்து, ஜி-20 உச்சி மாநாட்டு கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாகச் சென்று நிதிக்காக பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார். இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு” என அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பலர் ஈரான், ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து பிச்சை எடுப்பதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றால் சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானிலிருந்து ஈரான், ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்வதாகவும், இவர்களின் வருகையைத் தடுக்கவும் அந்நாடுகள் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன.
எனினும், சட்டரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைவதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு சென்றவுடன் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இப்படி பிச்சையெடுத்து சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களில்கூட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த விஷயம், உலக அரங்கில் பாகிஸ்தானை தலைகுனிய செய்திருப்பதாக அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.