யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இந்த உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
குழந்தைகள், பெண்கள் என்றும் பார்க்காமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது. போர் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசி ஏராளமானோரை படுகொலை செய்ததாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழ் ஈழம் வேண்டி போராடிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மகிந்த ராஜபக்ச அதிபராக பதவி வகித்த போது நடந்த இந்த அத்துமீறல்கள், அப்போது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் தான் தற்காலிகமாக 2 மாதங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்ததாகவும் அப்போது பிரபாகரனுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து தனக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என சிறிசேன கூறினார்.
எனினும் இறுதிக்கட்டப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் சிறிசேனா அதிபராக இருந்தபோது தாமே யுத்தத்தை முன்னின்று நடத்தியதாகவும் பிரபாகரன் வீழ்த்தப்பட்டதில் தனக்கு முக்கிய பங்கு என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது அதற்கு முரணாக சிறிசேன கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது