துபாயின் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் பிரம்மாண்டமான கைக்கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது..
ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 43-வது மத்திய கிழக்கு கைக்கடிகாரம் மற்றும் நகைக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த கண்காட்சியை ஷார்ஜா துறைமுகம் மற்றும் சுங்கவரித்துறையின் தலைவர் ஷேக் காலித் பின் அப்துல்லா பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கண்காட்சியில் அமைந்துள்ள அரங்கங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வியப்புடன் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் இந்தியா, ஹாங்காங், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
30,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தாய்லாந்து, ஹாங்காங், போன்ற நாடுகளில் செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட கைக்கடிகாரங்கள், அரிதான தங்க நகைகள், கண்களை வியக்க வைக்கும் வைர ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் முதல் முறையாக அமீரகத்தைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர்கள் இதில் சிறப்பு அரங்கை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 7 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகமான பொருட்கள் வாங்குபவர்கள் இறுதி நாளில் பிரம்மாண்ட பரிசுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த கண்காட்சி தினமும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.