“தமிழால், தமிழராய் இணைந்து தமிழை வளர்ப்போம்”- துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“தமிழால், தமிழராய் இணைந்து தமிழை வளர்ப்போம்”- துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“தமிழால், தமிழராய் இணைந்து தமிழை வளர்ப்போம்”- துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயணத்தின் மூன்றாவது நாளில் அமீரக முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளதாக கூறினார். மேலும் உலகளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளை செய்து வருகின்றன என்றும், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நோபல் குழுமம் சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஃகு தொழிற்சாலை அமைக்கவும், ஓய்ட் ஹவுஸ் இண்டெக்ரேடட் தையல் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கவும், போக்குவரத்துத்துறையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத்தொடர்ந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை முதலமைச்சர் சந்தித்தார்.

அப்போது, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், ஷெராப் குழுமம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரு ஒப்பந்தங்கள் மூலம் மேலும் 4,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்தமாக 2, 600 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகள் வாயிலாக தமிழ்நாட்டில் புதிதாக 9,700 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து துபாய் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற `நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ என்ற நிகழ்வில், துபாய் வாழ் தமிழர்களிடையே பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “மரம் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் அது அதன் வேரை விடுவதில்லை. அதை போல நாம் அனைவரும் தமிழால் இணைவோம், தமிழராய் இணைவோம், தமிழை வளர்ப்போம். தமிழை, தமிழ்நாட்டை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். சாதியாக, மதமாக உங்களை பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com