தமிழீழ தேசிய தலைவராக போற்றப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று. சிறு வயதிலேயே போர்க்குணத்துடன் இருந்த அவர் போர்க்களத்திற்கு சென்ற பாதையை தெரிந்துக்கொள்ளலாம்.
வேலுபிள்ளை பிரபாகரன். இந்தப் பெயரை உச்சரிக்காத தமிழர்களே இல்லை என சொல்லலாம். இலங்கையில் தமிழீழம் மலர ஆயுதமேந்தி போராட்டம் நடத்தியவர். தமது 13-ஆவது வயதில் தந்தை வேலுபிள்ளையுடன் பிரபாகரன் நடந்து செல்லும்போது, முதியவர் ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்வை பார்த்த பிறகே, தமிழீழத்துக்காக போராட வேண்டும் என்ற மன உறுதி பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அப்போதே, தமிழ் இனத்தை காரணம் காட்டி தாக்குபவர்களை, தாம் திருப்பி தாக்கப் போவதாக கூறியிருக்கிறார் பிரபாகரன். ஆனால், அப்போது அதனை பிரபாகரனின் தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், தந்தையிடம் சொன்ன வார்த்தையை 21 வயதில் நிறைவேற்றினார் பிரபாகரன். ஆம், இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இனவெறி காரணமாக தமிழர்களை காரணமின்றி சுட்டு வீழ்த்தியது இலங்கை அரசு. அதற்கு உறுதுணையாக இருந்த மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக்கொன்று தமது சுதந்திர வேட்கைப்போரை தொடங்கினார் பிரபாகரன். அப்போது அவர் எமது மக்களின் விடுதலைக்காக போராட செல்கிறேன். இனிமேல், வீட்டிற்கு திரும்பிவர மாட்டேன் என தமது பாதையை வகுத்துக்கொண்டார்.
பிரபாகரன் மீது கடும் விமர்சனங்கள் இருந்தாலும், அவரை பலரும் மாவீரன் என்றே அழைத்தனர். ஆனால் அதனை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. காரணம் என்னவென்று கேட்டால், "ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும் அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும், இரண்டுமே செய்திராத என்னை மாவீரன் என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்று பதில் தருவாராம் பிரபாகரன். தன்னை ஒரு மாவீரனாக அழைப்பதை பிரபாகரன் விரும்பாவிட்டாலும், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் அவர் மாவீரனாகவே நிறைந்திருக்கிறார்