முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் தலை முடி 59 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். அடிமை முறையை ஒழிக்க உழைத்தவர். அதிபரான பிறகும் தன்னடக்கத்தோடு செயல்பட்டவர். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை தனது உரையின் மூலம் விளக்கியவர்.
அவர் 1865ஆம் ஆண்டு OUR AMERICAN COUSIN என்ற மேடை நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த போது நாடக கலைஞர் ஜான் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட போது ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள தலை முடி அகற்றி எடுக்கப்பட்டது.
லிங்கனின் மனைவி மேரி டோட் தனது உறவினர் லிமான் பீச்சர் டோடுக்கு அதனை லிங்கனின் நினைவாக கொடுத்துள்ளார். ரத்தக் கரை படிந்த உரை கொண்ட தபால் மூலம் அனுப்பப்பட்ட அந்த முடியை லிமான் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர்.
பின்னர் அது விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஸ்டன் நகரில் உள்ள ஏல கம்பெனி ஒன்று லிங்கனின் தலைமுடியை ஏலத்தில் விட்டுள்ளது.
சுமார் 59 லட்ச ரூபாய்க்கு லிங்கனின் தலைமுடி ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் எடுத்தவரின் பெயரை ஏல கம்பெனி வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது.