2022 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான லியோனல் மெஸ்ஸி தங்கியிருந்த கத்தார் நாட்டிலுள்ள பல்கலைக்கழக அறை, குட்டி அருங்காட்சியமாக மாற உள்ளது.
35 வயதாகும் மெஸ்ஸி, கடந்த டிசம்பர் 18-ம் தேதியன்று நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையில் ஃப்ரான்ஸ் அணியை வீழ்த்தி தன் அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். கால்பந்து போட்டிகளின் ஜாம்பவனான மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை ஆட்டம் அனைத்திலுமே மிகச்சிறப்பாகவே விளையாடியிருந்தார். அவற்றை போற்றும் வகையில், கத்தாரில் அவர் தங்கியிருந்த பல்கலைக்கழக அறையை மினி மியூசியமாக்க உள்ளதாக பல்கலைக்கழக தரப்பு அறிவித்துள்ளது.
Peninsula Qatar எனப்படும் கத்தார் செய்தி நிறுவனம் இதுபற்றி வெளியிட்டுள்ள தகவல்களின்படி “மெஸ்ஸியின் அறை, இனி குட்டி அருங்காட்சியமாக செயல்படும்” என்று தெரியவந்துள்ளது. இச்செய்தி நிறுவனம், மெஸ்ஸியின் அறையை வீடியோ வடிவிலும் பதிவிட்டுள்ளனர்.
La Albiceleste's base camp என சொல்லப்படும் அர்ஜெண்டினா அணியின் தனி கட்டடமான இதில், நீச்சல்குளம் - உடற்பயிற்சி கூடங்கள் தொடங்கி கால்பந்து பயிற்சி செய்வதற்கான பிரத்யேக மைதானம் என அனைத்து வசதிகளும் உள்ளுக்குள்ளேயே இருந்தன.