”பலமுறை கனவு கண்டிருக்கிறேன்..” - ரசிகர்களுக்கு லியோனல் மெஸ்ஸி நெகிழ்ச்சி பதிவு!

”பலமுறை கனவு கண்டிருக்கிறேன்..” - ரசிகர்களுக்கு லியோனல் மெஸ்ஸி நெகிழ்ச்சி பதிவு!
”பலமுறை கனவு கண்டிருக்கிறேன்..” - ரசிகர்களுக்கு லியோனல் மெஸ்ஸி நெகிழ்ச்சி பதிவு!
Published on

கால்பந்து உலகக்கோப்பையை வென்றபிறகு ”பலமுறை கனவு கண்டிருக்கிறேன்..” என மெஸ்ஸி தனது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பலவிதமான எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் 2022 கத்தார் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய அர்ஜெண்டினா அணி 1978, 1986 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக 2022ல் அபாரமாக வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி.

விறுவிறுப்பாக எப்போதும் இல்லாத நிலையில் கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றனர் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணியினர். மொத்தத்தில் போட்டி உலக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த உலகக்கோப்பை தான் கடைசி உலகக்கோப்பை என்று அறிவித்திருந்தார் மெஸ்ஸி. இந்நிலையில் கோப்பையோடு மகிழ்ச்சியான நினைவுகளோடு விடைபெறுகிறார் மாடர்ன் புட்பால் ஜாம்பவான் மெஸ்ஸி என்று நினைத்திருந்த வேளையில், தான் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதில்லை என்றும், சாம்பியன் என்ற பெருமையுடன் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறி தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்று ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள மெஸ்ஸி, தனது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “உலக சாம்பியன்களே!!!! பலமுறை நான் கனவு கண்டிருக்கிறேன். நான் பல முறை கனவு கண்டிருக்கிறேன், நான் மிகவும் விரும்பினேன், நான் இன்னும் விழவில்லை, என்னால் நம்ப முடியவில்லை ... எனது குடும்பம், எனக்கு ஆதரவு அளித்தவர்கள் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. ஒன்றுபட்டு ஒற்றுமையாக போராடும்போது எதை இலக்காக வைத்திருக்கிறோமோ அதை அடையமுடியும் என்பதை அர்ஜென்டினாவினர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டோம்.

தனிமனிதர்களைத் தாண்டி, இந்த குழுவின் தகுதி என்னவென்றால், ஒரே கனவுக்கான அனைவரும் இணைந்து போராடுவதே அர்ஜென்டினாவினரான நம் பலம். நாம் செய்துவிட்டோம்!!! LET'S GO ARGENTINA DAMN!!!!! நாம் அனைவரும் விரைவில் சந்திப்போம்...” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

போட்டி தொடங்கியதிலிருந்தே பரபரப்பான ஆட்டமாக மாறியது இறுதிப்போட்டி. போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி. பின்னர் 36ஆவது நிமிடத்தில் டி மரியா அருமையான கோலை அடிக்க முதல் பாதிலேயே 2-0 என்று முன்னிலை பெற்று அசத்தியது அர்ஜெண்டினா அணி.

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 80ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அசத்த, அடுத்த ஒரு நிமிடத்திலேயே 81ஆவது நிமிடத்தில் இன்னொரு அபாரமான கோலை அடித்த எம்பாப்வே இறுதிகட்டத்தில் 2-2 என சமனில் முடிந்தது போட்டி.

போட்டி சமனில் முடிந்த நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் 108 ஆவது நிமிடத்தில் கோலடித்தார் மெஸ்ஸி. பின்னர் போட்டியில் அர்ஜெண்டினா அணியே வெற்றிபெறும் என்ற நிலையில், 118ஆவது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி திருவிழாவாக மாற்றினார் பிரான்ஸ் அணியின் எம்பாப்வே.

மீண்டும் சமனில் முடிந்து சுவாரசியம் அதிகமாக ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகியது. கடைசியாக வழங்கப்பட்ட 3 நிமிடங்களில் யாரும் கோல் அடிக்காத நிலையில் போட்டி பெனால்டி சூட் முறைக்கு சென்றது.

பெனால்டி சூட்டில் முதல் வாய்ப்பை மீண்டும் கோலாக மாற்றினர் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே இருவரும். அடுத்தடுத்த இரண்டு வாய்ப்புகளில் பிரான்ஸ் அணியை தடுத்து நிறுத்தினார் அர்ஜெண்டினா அணியின் கோல் கீப்பர். பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகளை அர்ஜெண்டினா கோலாக மாற்ற 4-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com