ஒருகாலத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் விளையாடியவர் கய் விட்டல். 46 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், ஓய்வுக்குப் பிறகு ஹூமானி பிராந்தியத்தில் உள்ள பபலோ ரேஞ்சில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று அவரைத் தாக்கியது. இதில் நிலைகுலைந்துபோன அவர் பலத்த காயமடைந்தார். எனினும், அவருடன் சென்ற வளர்ப்பு நாய், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த நாயையும் சிறுத்தை விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து, சிறுத்தையை எதிர்கொண்டு வளர்ப்பு நாயும் கடுமையாகப் போராடியதில் அதற்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே ஹெல்காப்டரில் அங்கு வந்த மீட்புக் குழுவினவர் விட்டலையும், வளர்ப்பு நாயையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கும் நாய்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுத்தையினால் பாதிக்கப்பட்ட கய் விட்டல் படத்தை, அவரது மனைவி இணையதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைப் பார்த்த பலரும் அவரிடம் நலம் விசாரித்துவருவதுடன் விரைவில் குணமடையவும் வேண்டி வருகின்றனர். கய் விட்டல், காட்டு விலங்கைச் சந்திப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் தனது படுக்கைக்கு அடியில் 8 அடி நீளமுள்ள ஒரு பெரிய முதலை மறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 150 கிலோ எடையுள்ள அந்த முதலை, இரவு முழுவதும் அவர் படுக்கைக்கு அடியிலேயே இருந்துள்ளது. மறுநாள் காலை வீட்டுப் பணிப்பெண் வந்து பார்த்து சத்தம் போட்டபோதுதான் அவருக்கே விவரம் தெரிய வந்தது.
இதையும் படிக்க: “எதிர்க்கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது” - வைரலாகும் மம்தா பானர்ஜியின் பேச்சு!