லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து துறைமுக மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை தொடர்கிறது. அதிக அபாயம் கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததாக அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பாக இருபது பேரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
அடுத்தகட்ட விசாரணைக்காக 16 அதிகாரிகள், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய லெபனான் அதிபர் மைக்கேல் ஆவ்ன், "இந்த வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ராக்கெட் தாக்குதல் அல்லது வெடிகுண்டு அல்லது வேறு செயல்களின் மூலம் வெளியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வாய்ப்பிருக்கலாம்" என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அவர், துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.