லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து துறைமுக மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை தொடர்கிறது. அதிக அபாயம் கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததாக அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெடிவிபத்துக்கு எதிராக வெடித்தெழுந்த மக்கள், அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பெய்ரூட் தியாகிகள் சதுக்கத்தில் ஒன்றாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டு அமைச்சகம் முன்பு கூடிய மக்கள், அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி அதிபர் மைக்கேல் ஆவ்னின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றது போர்க்களம்போல் காட்சியளித்தது.
"அரசியல் தலைவர்களின் அலட்சியப்போக்குதான் இந்த மிகப்பெரிய வெடிவிபதுக்குக் காரணம். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். இந்த கொடூர விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் பொருளாதாரமும் மிகப்பெரும் சீரழிவைச் சந்தித்துள்ளது" என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பெய்ரூட் நகரில் நடந்த போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறியது. அதில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். 117 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ரெட்கிராஸ் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.