‘கற்க கசடற’ என்ற படத்தில், நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதில் வடிவேலு ஒருவரிடம், ’நீ ஒரு மணி நேரம் சும்மா இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் நான் உன்னிடம் வாழ்நாள் முழுதும் சும்மா வேலை பார்க்கிறேன்’ என சொல்வார். அதை கேட்ட அந்நபரும் ‘சும்மாதானே இருக்கணும்... இருக்கிறேன். அப்படி முடியவில்லையெனில் 5 அடி அல்ல, 10 அடி வாங்கிக் கொள்கிறேன்’ எனப் போட்டிக்கு ஒப்புக்கொள்வார்.
பின்னர் போட்டி தொடங்கும். சில நிமிடங்களிலேயே அவரிடம் பருப்புக் கடைக்காரரொருவர் வந்து காசு கேட்பார். அதற்கு அவர், ’இப்போது சும்மா இருக்கேன். அப்புறமாக காசு தருகிறேன்’ என்பார். அடுத்து போஸ்ட்மேன் மணியார்டர் கொண்டுவருவார்.
அதையும் வாங்க விடாமல் அவரை வடிவேல் தடுப்பார். இப்படி, அவருக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வந்துகொண்டே இருக்கும். இதனால், அவர் போட்டியிலிருந்து தோல்வியுறுவதுடன், வடிவேலுவிடம் சொன்னப்படி சாட்டை அடி வாங்குவார். இந்த காமெடியைக் காட்சியைக் கண்டுகளிக்காதவர்களே இருக்க முடியாது. யாரும் எளிதில் சும்மா இருக்க முடியாது என்பதாக இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இதேபோன்று, ’சும்மாவே படுத்திருந்தால் போதும்; அதற்குப் பரிசு’ எனும் போட்டியொன்று நிஜமாகவே மாண்டினீக்ரோ (Montenegro) என்ற நாட்டில் (தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது) நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான செய்தியை இங்கு காண்போம்.
ஐரோப்பாவில் உள்ள மிகச்சிறிய நாடு மாண்டினீக்ரோ. இந்த நாட்டில் உள்ள பிரெஸ்னா கிராமத்தில், ஆண்டுதோறும் ‘சோம்பேறி குடிமகன்’ என்கிற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை வருடம் ஒருமுறையென ரிசார்ட் ஒன்று நடத்தி வருவதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 21 பேர் இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். 26 நாள்கள் கடந்துள்ள நிலையில், தற்போது 7 பேர் விடாமுயற்சியுடன் போட்டியில் நீடித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை 24 மணிநேரமும் மெத்தையிலேயே படுத்திருக்க வேண்டும். உட்காரவோ, நிற்கவோ அனுமதி இல்லை. அவர்கள் படுத்துத் தூங்க அனுமதி உண்டு. படுத்துக்கொண்டே உணவு சாப்பிடலாம், கூல் டிரிங்ஸ்களை குடிக்கலாம்.
தவறுதலாக படுக்கையில் இருந்து எழுந்தால்கூட உடனடியாக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். 8 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறைசெல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. செல்போன், மடிக்கணினி உபயோகிக்கவும், புத்தகங்கள் படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கடைசிவரை படுத்து வெற்றிபெறுபவருக்கு ‘சோம்பேறி குடிமகன்’ (Laziest Citizen) என்ற விருதுடன் ரூ.88,000 ($1,070) பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
மேலும், படுக்கையில் உள்ள போட்டியாளர்களின் உடல்நிலையும் தொடர்ந்து மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற இந்த போட்டி 117 மணிநேரத்தில் முடிவுக்குவந்த நிலையில், இந்தாண்டு இன்னும் 7 பேர் வெற்றிக்காக போராடிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கடந்த 2021ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றவரும், இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொண்டுள்ள நபருமான டுப்ராவ்கா அக்சிக், "இந்த ஆண்டும் போட்டி கடுமையாகவே இருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். இதில் எங்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எங்களைக் குழந்தைபோலப் பார்த்துக் கொள்கிறார்கள். நாங்கள் சும்மா தூங்கினால் போதும்" எனத் தெரிவித்துள்ளார்.
மொஜ்கோவாக்கிலிருந்து முதல்முறையாக போட்டியிடும் ஃபிலிப் நெசெவிக், ”இந்தப் பரிசைப் பெறுவேன். எங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே உள்ளது. நிறுவனம் அனைத்தையும் செய்து தருகிறது. நேரம் விரைவாகவும், மகிழ்ச்சியாகவும் செல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிசார்ட்டின் அமைப்பாளரும் உரிமையாளருமான ராடோன்ஜா பிளாகோஜெவிக், ”கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மாண்டினீக்ரோ நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சோம்பேறிகள் என்ற பெயர் உண்டு. அதை நக்கலடிக்கும் விதமாகவே இந்தப் போட்டி முன்னர் தொடங்கப்பட்டது. அதுவே இப்போது சீரியஸாக மாறிவிட்டது” என்றுள்ளார்!