வியட்நாம் நாட்டில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அந்த மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாட்டிக்கொண்ட 22 ராணுவ வீரர்களைக் காணவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எப்போதும் இல்லாத வெள்ளப்பெருக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த ஆண்டு எதிர்கொள்கின்றன.
அக்டோபர் மாத ஆரம்ப நாட்களில் கனமழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதுவரை வியட்நாம் மாகாணங்களில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலச்சரிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வியட்நாம் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பாண் வான் ஜியாங்க், "நாங்கள் இன்னுமொரு உறக்கமற்ற இரவை எதிர்கொண்டோம்" என்றார். குவாங் டிரை மாகாணத்தில் உள்ள ஆறுகளில் இருபது ஆண்டுகளில் காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.