ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் வேதாந்தா நிறுவனம், தனது ஆலைகளுக்காக பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஜான் மெக்டொனல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா, ஜாம்பியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தா நிறுவனம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகள் புகார் கூறியிருப்பதாக பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.