நடனம், இசையால் பிரமிக்க வைத்த பாப் இசை மன்னன்... மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் பகிர்வு

நடனம், இசையால் பிரமிக்க வைத்த பாப் இசை மன்னன்... மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் பகிர்வு
நடனம், இசையால் பிரமிக்க வைத்த பாப் இசை மன்னன்... மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் பகிர்வு
Published on

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, அதற்கு ஏற்றார்போல் நடனமாடுவது என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர், பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன்.

SMOOTH CRIMINAL - மைக்கேல் ஜாக்சனின் புதிய பரிமாணத்தை உலகமே வியந்து பார்த்த, கேட்ட இசைத் தொகுப்பு. 1987-ஆம் ஆண்டு வெளியான இந்த இசைத் தொகுப்பில் கீழே விழாமல் 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து அவர் ஆடிய நடனம் இன்றும் நம்ப முடியாததாகும். நன்கு பயிற்சி பெற்ற நடனக்கலைஞர்களால் மட்டுமே உடலை நேர்கோட்டில் 25 முதல் 30 டிகிரி கோணம் வரை சாய்க்க முடியும் எனக் கூறப்படும் நிலையில், மைக்கேல் ஜாக்சன் தனது உடலை 45 டிகிரி வரை சாய்த்துள்ளார். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக காலணிகளும் ஜாக்சனின் அதீத உடல் வலிமையுமே இதற்குக் காரணம் என அப்போது கண்டறியப்பட்டது.

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருந்த ஜாக்சன் தனது 5 வயதிலேயே சகோதரர்களுடன் இணைந்து இசைப்பயணத்தை தொடங்கினார். அவர்களது குழு ஜாக்சன் ஃபைவ் என்றழைக்கப்பட்டது. 13 வயதில் தனியாக பாடத் தொடங்கிய ஜாக்சனின் வாழ்க்கை ஓர் இரவிலேயே உச்சத்தை தொட்டுவிட்டதாகக் கூற முடியாது. அவரது முதல் இசைத்தொகுப்பு வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து 1982 ஆம் ஆண்டு திரில்லர் வெளியான பின்புதான் உலகின் கவனம் அவர் மீது திரும்பியது. அப்போது அந்த இசைத் தொகுப்பு உலகளவில் அதிகம் விற்பனையாகி முதலிடம் பிடித்தது.

பின்னர் BAD, DANGEROUS போன்ற ஆல்பங்களை கேட்ட ரசிகர்கள் ஜாக்சனின் இசைக்கு அடிமையாயினர். ஜாக்சனும் புகழின் சிகரத்தை தொட்டார். அவரது ஆல்பங்கள் ஒவ்வொன்றும் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. ஜாக்சனின் மறைவுக்குப் பின்னரும் அவரது ஆல்பங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

நடனத்தில் மாயவித்தை காட்டும் ஜாக்சனின் நிகழ்ச்சி என்றால் அரங்கமே நிரம்பி வழியும். ரசிகர்களின் ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்தவே முடியாது. இயேசு கிறிஸ்துவுக்குப் பின்னர் இந்த பூமியில் அதிக பிரபலமானவராக அறியப்பட்டவர் என்று மைக்கேல் ஜாக்சனைச் சொல்லலாம்.

நடனத்தாலும் இசையாலும் உலகையே ஆட்டிப்படைத்த மைக்கேல் ஜாக்சனின் பிறந்த தினம் இன்று. தேசம், மொழி, மதம் என இவை அனைத்தையும் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவருக்கு ரசிகர் கூட்டம் இருந்தது, இருக்கிறது. மைக்கேல் ஜாக்சன் மறைந்தாலும், அவரது இசை எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com