"எங்கள் மிகப்பெரிய எதிரி... மீண்டும் அணுசக்தி சோதனை!"- அமெரிக்காவை மிரட்டும் கிம் ஜாங் உன்

"எங்கள் மிகப்பெரிய எதிரி... மீண்டும் அணுசக்தி சோதனை!"- அமெரிக்காவை மிரட்டும் கிம் ஜாங் உன்
"எங்கள் மிகப்பெரிய எதிரி... மீண்டும் அணுசக்தி சோதனை!"- அமெரிக்காவை மிரட்டும் கிம் ஜாங் உன்
Published on

அமெரிக்காதான் தங்களது மிகப் பெரிய எதிரி என்று குறிப்பிட்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தீவிரப்படுத்த தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமகால சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சியாளர்கள் என்ற வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் கிம் ஜாங் உன். ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்காவுக்கு ஒரு வகையில் சவாலாக இருக்கிறார் என்றால், மற்றொரு‌ முறையில் சவால் கொடுப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து உலக நாடுகளுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்தார் கிம்.

அந்தச் சந்திப்பில் வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா இனி ஈடுபடாது என அறிவித்த கிம் ஜாங் உன், உலக நாடுகளுடன் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இதற்காக தங்கள் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கிம் ஜாங் உன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதுபற்றி பரிசீலிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை அடுத்து, கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் கிம். அதிலும் தற்போது ட்ரம்ப் ஆட்சி முடிந்து பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் கிம் இறங்கியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியாவில் நேற்று நடந்த ஆளும் கட்சியின் ஒரு முக்கியக் கூட்டத்தில் பங்கேற்ற கிம், வடகொரியா மீண்டும் அதிநவீன அணு ஆயுத அமைப்புகளை உருவாக்குவதாகவும், அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தார். மேலும், போர்க் கப்பல்கள், நீருக்கடியில் செலுத்தப்படும் அணு ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டார்.

அந்தக் கூட்டத்தில் கிம், ``வடகொரியா தங்கள் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது. ஆனால், எதிரி நாடுகள் வட கொரியாவுக்கு எதிராக எதுவும் செய்யாத வரை அதுவும். வட கொரியா மீதான அமெரிக்க படையெடுப்பின் ஆபத்து அதிகரிக்கும்போது வட கொரியா தனது ராணுவ மற்றும் அணுசக்தி திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும். இதனால்தான் அணுசக்தி திறனை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

எதிரிகளின் அதிநவீன ஆயுதங்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருவதை நாம் தெளிவாகக் காணும் நேரத்தில், நம் சக்தியை வலுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது பெரிய முட்டாள்தனமாகும். அது ஆபத்தில் கொண்டுபோய் விடும். கொரிய தீபகற்பத்தில் நாம் தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பை கட்டமைத்து கொள்வது, அமெரிக்க ராணுவ அச்சுறுத்தல்களை அடக்குவதற்கு வழிவகுக்கும்.

அமெரிக்கா நமது நாட்டின் மிகப்பெரிய எதிரி. நமது புரட்சிக்கு மிகப்பெரிய தடையாகவும், நமது மிகப்பெரிய எதிரியாகவும் இருக்கும் அமெரிக்காவைத் தாழ்த்துவதில் கவனம் செலுத்தி வளர வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும், வட கொரியாவுக்கு எதிரான அதன் கொள்கையின் உண்மையான தன்மை ஒருபோதும் மாறாது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுக்கான புதிய திட்டமிடல் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. நாம், அணுசக்தி தொழில்நுட்பத்தை மேலும் முன்னேற்ற வேண்டும். மேலும் சிறிய அளவிலான, இலகுரக அணு ஆயுதங்களை உருவாக்க வேண்டும். இலக்குகளை பொறுத்து அதை வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கிம் பேசியுள்ளார்.

கிம்மின் இந்த அணு ஆயுத அறிவிப்பு, அமெரிக்கா உடனான உறவுகளை துண்டிக்கும் என்று ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. கிம் நேற்று தெரிவித்த கருத்துக்கள், இந்த மாத இறுதியில் பதவியேற்கவுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என கிம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், அமெரிக்கா அதற்கு செவி சாய்க்காததால் தற்போது மிரட்டும் தொனியில் இறங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com