குறிப்பிட்ட தீவு மீது ஏவுகணை சோதனையை தொடரும் வடகொரியா - காரணம் என்ன?

குறிப்பிட்ட தீவு மீது ஏவுகணை சோதனையை தொடரும் வடகொரியா - காரணம் என்ன?
குறிப்பிட்ட தீவு மீது ஏவுகணை சோதனையை தொடரும் வடகொரியா - காரணம் என்ன?
Published on

கடந்த ஜனவரி மாதம் மட்டும் அதிகளவில் அல்சோம் தீவு மீது, வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததில், அந்த இடம் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வடகொரியா. இந்நிலையில், வட கொரியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது அல்சோம் தீவு. இந்த தீவு, வடகொரியாவால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை, 25 -க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது தெரியவந்தள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்காக, வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தப் பின்னரும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்தது முதல், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், 8 ஏவுகணைகளை அல்சோம் தீவு மீது அந்நாடு சோதித்துப் பார்த்துள்ளது.

இதையடுத்து தென்கொரியா, வட கொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இநிலையில், அல்சோம் தீவு மீது வட கொரியா, அதிகளவில் ஏவுகணைகளை ஏவி சோதித்துப் பார்த்து வருவதால், கிம் ஜாங் உன், அந்த தீவு மீது வெறுப்பை கொண்டிருக்க வேண்டும் என்று ஆயுத நிபுணர் ஜோசப் டெம்ப்சே, தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். மேலும், அல்சோம் தீவு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னால் ‘மிகவும் வெறுக்கப்படும் பாறை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த தீவு பாறைகளின் தரிசு குவியல் என்றே கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள சர்வதேச போர்த்திறன் ஆய்வுகள் இன்ஸ்ட்யூட்டில், பாதுகாப்பு மற்றும் ராணுவ பகுப்பாய்வு ஆராய்ச்சியாளரான ஜோசப் டெம்ப்சே, ‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அல்சோம் தீவு மீது நவீன ரக ஏவுகணைகளை தாக்கி ஆராயும் போது அது நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் ஏவுகணைகள் தாக்கும் இலக்கு மிக அருகில் இருப்பதால், இதன்மூலம் ஏவுகணைகளின் துல்லியத்தை அறிந்துகொள்ள முடியும்” என்று ஜோசப் டெம்ப்சே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிம் ஜோங் உன், அல்சோம் தீவில், ஐ.ஆர்.பி.எம். இடைநிலை தூர புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து பார்த்துள்ளார். இந்த ஏவுகணைகளில் சில மணிக்கு 3,000 கி.மீ. உயரத்தை எட்டியதாகவும், கடந்த ஜனவரி 25 அன்று. இந்த ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கும் முன் 1,800 கி.மீ தூரம் வரையில் பறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கான புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தன. இந்த சோதனைக்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களும் தெரிவித்து இருந்தன.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள இந்த அல்சோம் தீவுப் பகுதியில், வட கொரிய கப்பல்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அதிபர் கிம், தனது ராணுவ ஆயுதக் கிடங்கை நவீனமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு முதல், புதிய திட எரிபொருள் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், சுமார் 250-500 கிமீ பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த ஏவுகணைகளில், சில 600 கி.மீ.களுக்கு மேல் பறக்கும் தனமை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஏவுகணைகளை கொண்டு தாக்கும் போது ஜப்பானின் மேற்குக் கடற்கரையின் சில பகுதிகளை அடையும் அளவுக்கு நீளமானதாக உள்ளது.

இந்தப் புதிய திறன்களை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரயில் பெட்டிகளில் இருந்து ஏவி சோதிக்கும் போது, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏவி இலக்கை அடையும் வகையில் சோதனை செய்து பார்த்துள்ளது வட கொரியா. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அல்சோம் தீவில் சோதித்து பார்க்கவும் வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும் இதுவரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ஏவுகணை சோதனைகளால், அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகமும், அந்நாட்டு மக்களும், பீதியடைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றே சொல்லப்படுகிறது . தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப்பைப் போலல்லாமல், வட கொரிய அதிபர் கிம்மின் ஏவுகணை அச்சுறுத்தல் பற்றி குறைவாகவே பேசி வருகிறார். "ட்ரம்ப் நிர்வாகத்தின்போது வட கொரியா ஏவுகணை சோதனைகளை அதிகளவில் சோதித்து பார்த்தது" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தற்போதைக்கு, அல்சோம் தீவு மீது ஏவுகணை சோதனை குண்டுவீச்சு தொடரும் என்றே நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், 2022-ல் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏற்கனவே ஏவி சோதனை செய்துள்ளது. மேலும் கிம்மின் தந்தை கிம் ஜாங் இல் மற்றும் அவரது தந்தை கிம் இல் சங் ஆகியோரின் பிறந்தநாளான பிப்ரவரி 16 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களில் ராணுவக் காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வரும் தென் கொரியாவின் குடியரசுத் தலைவர் நீல நிற மாளிகையின், முன்னாள் போர்த்திறன் பாதுகாப்பு செயலாளரான சியோன் சியோங்-வுன் கூறுகையில், "வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே இலக்கான அல்சோம் தீவைத் தாக்குவதன் மூலம், வட கொரியா தனது ஏவுகணைகளின் திறனை சோதித்து மேம்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் அல்சோம் தீவை உலக நாடுகள் சாட்டிலைட்டுகளால் கவனமாக பார்த்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com