போலி தீவிரவாத சதி காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா. இவர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். இந்திய அணியுடன் நாளை மறுநாள் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்காக பயிற்சியில் இருக்கிறார் உஸ்மான். இவரது அண்ணன் அர்சலான் கவாஜா. (வயது 39).
(விராத் கோலியுடன் உஸ்மான் கவாஜா)
இவரது பல்கலைக்கழக நண்பர் முகமது கமீர் நிஜாமுதீன். இலங்கையை சேர்ந்தவர். பி.எச்.டி படிக்கும் கமீருக்கும், அர்சலானுக்கும் இடையே பெண் தொடர்பான பிரச்னை. இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை கொல்ல
கமீர் திட்டமிட்டிருப்பதாக, போலீசில் அர்சலான் பொய் புகார் கொடுத்தார்.
(கவாஜா குடும்பம்)
இதுபற்றி கமீரின் டைரியிலும் அரசியல் தலைவர்களை கொல்லப் போவதாக விளையாட்டாக எழுதி வைத்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கமீரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் டைரியில் இருந்த கையெழுத்து அவருடையது இல்லை என்று முடிவுக்கு வந்ததை அடுத்து விடுவித்தனர்.
பெண் பிரச்னை காரணமாக, அர்சலன் கவாஜாதான், இதை செய்தது என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கவாஜாவின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அர்சலானை இன்று காலை கைது செய்தனர்.
இது குறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் கமிஷனர் மிக் வில்லிங் கூறும்போது, ‘’நிஜாமுதீன் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையில்லாத தொந்தரவுகளை கொடுத்துவிட்டோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். அவர் செய்த நீதிமன்றச் செலவை கொடுத்து விடுவோம்’ என்றார்.
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்லான் கவாஜா, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.