அன்று கேரளாவில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் நீதிபதி - ஒரு சாமானியனின் பயணம்

அன்று கேரளாவில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் நீதிபதி - ஒரு சாமானியனின் பயணம்
அன்று கேரளாவில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் நீதிபதி - ஒரு சாமானியனின் பயணம்
Published on

வாழ்க்கையில் யாருக்குத்தான் கஷ்டங்களும் சோதனைகளும் இல்லை. சோதனையில் அமிழ்வதைவிட அதனை சாதனையாக்குவதை எத்தனைபேர் சாத்தியமாக்கி இருக்கின்றனர்? வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அதனை உருவாக்கி முன்னேற வேண்டும் என்பதை சாதித்த பலரும் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளனர். அதுபோல அடிமட்டத்திலிருந்து அமெரிக்காவரை முன்னேறிய ஒருவர் ”உங்கள் எதிர்காலத்தை யாரும் தீர்மானிக்க விடாதீர்கள்” என்கிறார் உறுதியுடன். யார் இவர்? - வாங்க அவரைப்பற்றி தொகுப்பாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த சுரேந்திரன் பட்டீல். 51 வயதான சுரேந்திரன் கேரள மாநிலம் காசார்கோடு மாவட்டத்தில் தனது சிறுவயதை கழித்துள்ளார். வாட்டியெடுத்த வறுமை காரணமாக தனது பள்ளிக்கல்வியை முழுவதும் முடிக்கமுடியாமல் தினக்கூலி வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் ஒருவழியாக தனது விடாமுயற்சி மற்றும் நண்பர்கள் உதவியுடன் படிப்பை முடித்து தற்போது அமெரிக்காவில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். தான் கடந்துவந்த கடின பாதையை NDTV-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் சுரேந்திரன்.

10ம் வகுப்புடன் போதும் என நினைத்தேன்!

”கேரள மாநிலம் காசார்கோடில் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பத்தின் வறுமை காரணமாக 10ஆம் வகுப்புடன் பள்ளிபடிப்பை கைவிட்டேன். அதன்பிறகு தினக்கூலி வேலையாக பீடி சுற்றினேன். அதுதான் எனது வாழ்க்கையின் நோக்கத்தையே மாற்றியது. படிக்கவேண்டும் என ஆசைப்பட்ட எனக்கு எனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பணம் கொடுத்து உதவினர். அதன்மூலம் எனது சட்டப்படிப்பை முடித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் பராமரிப்பு வேலைக்குச் சென்றேன்.

வேலை செய்துகொண்டே கல்லூரிக்கு போனேன்!

இ.கே நாயனார் மெமோரியல் அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு பதிவு செய்தேன். ஆனால் வேலை செய்துகொண்டே கல்லூரிக்கு சென்றதால் என்னால் அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்க முடியவில்லை. அது என்னுடைய வருகைப்பதிவை பாதித்தது. அதனால் பேராசிரியர்கள் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆனால் அப்போதும் வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்ட நான், எனது நிலைமையை எடுத்துக்கூறி, ’நான் நல்ல மதிப்பெண்கள் பெறாவிட்டால் படிப்பை நானே நிறுத்திக்கொள்கிறேன்; இந்த முறை எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் வழங்குங்கள்’ என அவர்களிடம் கெஞ்சினேன்.

எதிர்த்த ஆசிரியர்களே ஒத்துழைத்தார்கள்!

தேர்வு முடிவுகள் வந்தபோது நான் டாப்பராக நின்றேன். எனவே முந்தைய ஆண்டு எதிர்த்த ஆசிரியர்களே அடுத்த ஆண்டு எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அவர்கள் உதவியுடன் கல்லூரியின் முதல்ல் மாணவனாக தேர்ச்சிபெற்றேன். அதன்பிறகு கோழிக்கோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர முயன்றபோதும் அதே பொருளாதார சிக்கல்தான் தடையாக நின்றது. ஒருவழியாக 1995ஆம் ஆண்டு எனது சட்டப்படிப்பை முடித்து பட்டதாரியானேன்.

எனது LLB படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் எடுத்த பயிற்சியானது என்னை அமெரிக்காவில் சென்று பிழைப்பை நடத்த உதவியது. அங்கு சென்றும் எனக்கு ஏற்பட்ட தடைகள் முடிவுக்கு வரவில்லை. டெக்சாஸில் நான் இந்த பதவிக்கு போட்டியிட்டபோது கூட, எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கபட்டன. எனது உச்சரிப்பை கேலி செய்தனர். ஜனநாயக முதன்மை கட்சி சார்பில் நான் போட்டியிட்டபோதும், எனது சொந்த கட்சியே நான் வெற்றிபெறுவேன் என நினைக்கவில்லை.

நான் இதை சாதிப்பேன் என ஒருவர்கூட நம்பவில்லை. ஆனால் இன்று நான் இங்கு இருக்கிறேன். அனைவருக்கும் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் எதிர்காலத்தை யாரும் தீர்மானிக்க விடாதீர்கள். நீங்கள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கவேண்டும்” என்கிறார் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுடன்.

அமெரிக்காவுக்கு போனது எப்படி?

1995 ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த சுரேந்திரன் கேரளாவில் உள்ள ஹோஸ்டர்க்கில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். நாளாக நாளாக பிரபலமான வழக்கறிஞராகவும் மாறியிருக்கிறார். பின்னர், சுமார் 10 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். இப்படி சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் 2007 ஆம் ஆண்டு ஒரு திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு அவரது கதவை தட்டியிருக்கிறது. அதாவது, செவிலியராக அவரது மனைவி பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படவே, அவருடன் இவரும் பறந்துசென்றுவிட்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாஸ்டன் பகுதியில் கணவன் - மனைவி மற்றும அவர்களது இரண்டு குழந்தைகள் என அனைவரும் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்கு சென்றும் சுரேந்திரன் சும்மா இருக்கவில்லை. அங்கும் தன்னுடைய வழக்கறிஞர் பணிக்கான வேலைகளை தீயாய் மேற்கொண்டிருக்கிறார். அதன் முதற்கட்ட பணியாக டெக்சாஸ் பார் தேர்வினை எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் சட்டதிட்டங்களை முழுமையாக புரிந்து கொள்ள விரும்பிய சுரேந்திர், ஹாஸ்டன் சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம் படிப்பை மேற்கொண்டு 2011ல் அதனையும் முடித்தார். அதன் பிறகு பல்வேறு சட்ட நுணுக்கங்களை கற்றறிந்தார். குறிப்பாக, சர்வதேச சட்டப் பிரிவில் தனது கவனத்தை செலுத்தினார். பின்னர், கிரிமினில், குடும்ப நலம், சிவில், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு பிரிவு வழக்குகளை நடத்தியும் வந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com