சமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை ஆதாரமாக கொண்டு, தனது ஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தந்தையின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது கேரள வட்டார போக்குவரத்துறை.
கேரள மாநிலம் கொச்சி அருகே எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குழந்தை ஸ்கூட்டர் ஓட்டுவதை அதுவழியே காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டார். வைரலான இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு, அந்த வீடியோவின் பதிவெண் அடிப்படையில் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், அந்த வாகனம் பலுத்துருட்டி பகுதியை சேர்ந்த ஷிபுபிரான்ஸிஸ் என்பவருடையது என தெரிய வந்தது.
அவரை அழைத்து விசாரித்ததில் ஆர்வ மிகுதியால் தனது ஐந்து வயது மகள் ஸ்கூட்டர் ஓட்ட, பின்னிருக்கையில் ஹெல்மெட் அணிந்தவாறு தானும், மற்றொரு குழந்தை, மனைவியும் பயணித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஷிபு பிரான்ஸிஸ்சின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து எர்ணாகுளம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி வினோத்குமார் உத்தரவிட்டார். இதுபோன்று பருவ வயது எட்டாதவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்குத்தான் தண்டனை என கேரள வட்டார போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.