அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவரின் முட்டிக்கும் தரைக்கும் நடுவே 8 நிமிடங்கள் 46 நொடிகள் சிக்கிப் பிரிந்தது ஜார்ஜ் பிளாய்டின் உயிர். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்ற பிளாய்டின் அபயக்குரல் அங்கு நின்ற ஒரு காவல் அதிகாரியின் மனதுக்கும் கேட்கவில்லை. உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸ் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் இன்று அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது
இதற்கிடையே கலவரம் தொடர்பாக மாநில ஆளுநர்களை அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் ராணுவத்தைக் கூட களம் இறக்கிவிடுவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு உயர் காவல் அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேசிய காவல் அதிகாரி ஹோஸ்டன், அதிபரால் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு இருங்கள். 20 வயதுக்குட்பட்ட ஆண்களையும், பெண்களையும், இளம் வயதினரையும் நாம் சிக்கலில் சிக்க வைத்துள்ளோம். இது ஆதிக்கம் செலுத்தும் நேரம் அல்ல. மக்களின் மனங்களை வென்றெடுக்கும் நேரம். பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
இந்த நேரத்தில் பலத்தைக் காட்டுவது நல்ல தலைமைக்கு அழக்கல்ல. நமக்கு இப்போது தேவை நல்ல தலைமை. இது ஹாலிவுட் அல்ல இது நிஜ வாழ்க்கை. என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் அவர் வெறுப்பை அடக்கும் வழி அன்புதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.