கராச்சி விமான நிலையத்தில் இளம்பெண்ணை துன்புறுத்தியதற்காக பாகிஸ்தான் குடியேற்ற அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பஹ்ரைனில் இருந்து கராய்ச்சி விமான நிலையத்திற்கு இளம்பெண் ஒருவர் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்து அதிகாரி ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோ கிளிப்பில், “அந்த இளம்பெண் பயணியை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தனிப்பட்ட தொடர்பு எண்ணை ஏன் கேட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
எந்தவொரு தனிப்பட்ட தொடர்புக்கும் தொலைபேசி எண்ணைக் கோரவில்லை என்றும் குடிவரவு படிவத்தில் குறிப்பிட தேவை என்பதால் தகவல்களைக் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். மேலும், அந்த பெண் பயணி தனக்கு சில இனிப்புகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரி கோரியுள்ளார். ஆனால் அதை கிண்டலாக கேட்டதாக அந்த அதிகாரி ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட முறையில் அந்த பெண்ணை தெரியாதபோது நகைச்சுவையாக இனிப்புகளைக் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை மத்திய புலனாய்வு அமைப்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் துறை ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.