அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வியைத் தழுவினார். இதனால், அவரது ஆதரவாளர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்திருந்த புகைப்படங்களும், கண்ணீர் சிந்திய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் தோல்விக்குப் பிறகு உரையாற்றிய கமலா ஹாரிஸ், “இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது அல்ல. ஆனால், அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும். இந்தத் தேர்தல் முடிவை நான் ஒப்புக் கொண்டாலும், தேர்தல் பிரசாரத்தில் தூண்டப்பட்ட சண்டையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
இந்த தோல்விக்காக யாரும் விரக்தியடைய வேண்டாம். நாம் தொடர்ந்து போராடுவோம். நாம் இருண்ட காலத்திற்குள் நுழைவதாக பலர் உணர்வதை நான் அறிவேன். ஆனால், நம் அனைவரின் நலனுக்காக அது அவ்வாறு இருக்காது என நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சல்மான் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்.. மும்பை போலீஸ் விசாரணை!
அதேநேரத்தில், கமலாவின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆதரவாளர்களும் ஹாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்கப் பாடகி பில்லி ஐலிஷ், ஹாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஜேம் லீ கர்டிஸ், பிரபல ராப் பாடகி கார்டி பி, பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஆப்பில்கேட் ஆகியோர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த கமலா ஹாரிஸ், இந்தத் தேர்தலில் தோல்வியுற்றபோதும் அவருக்கு அதிபர் ஜோ பைடன் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் ஆட்சியில் ஏற்பட்ட பணவீக்கம், பொருளாதாரத்தில் சரிவு போன்றவை ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கான காரணமாக சொல்லப்படுகிறது