உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் விழுந்து விழுந்து சிரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இரண்டு வாரத்தை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவத்தினரும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்ததைகளும் தோல்வி அடைந்துள்ளதால் போர் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை போலந்து அதிபர் ஆன்ட்ரெஸஸ் டியூடா இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது செய்தியாளர் ஒருவர், "உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா?" என கேள்வியெழுப்பினார். மேலும், போலந்து அதிபரிடமும், "உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்துவீர்களா?" என கேள்வி கேட்டார்.
இந்த கேள்விகளுக்கு யார் முதலில் பதில் சொல்வது என்பது போல இரு நாட்டு தலைவர்களும் சிறிது மவுனம் காத்தனர். பின்னர், போலந்து அதிபரை பார்த்த கமலா ஹாரீஸ், "நீங்களே முதலில் பதில் கூறுங்கள். ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்" எனக் கூறிவிட்டு சில நொடிகள் விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உயிருக்கு பயந்து தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் உக்ரைன் அகதிகள் குறித்த கேள்விக்கு, ஒரு நாட்டின் துணை அதிபர் சிரிப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என நெட்டீசன்கள் விமர்சித்து வருகின்றனர்.