அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் 2020-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலரை நன்கொடையாக பெற்று மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்த கமலா ஹாரிஸ் தற்போது பரப்புரை செய்யக்கூட நிதியில்லாத காரணத்தால் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு தற்போது கட்சியில் 3 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ், தேர்தல் பிரச்சாரம் செய்வதை முடித்துக்கொள்ள விரும்புவதாகவும், தனக்கு இதுவரை ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு கோடீஸ்வரி இல்லை எனக்கூறியுள்ள அவர், தேர்தலுக்காக செலவழிக்க தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.