சரியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மாதத்தில், இதே நாளில் விண்வெளியில் ஆராய்ச்சிப்பணிகளை முடித்துக்கொண்டு 7 உயிர்களோடு திரும்பிக்கொண்டிருந்தது நாசாவின் கொலம்பியா விண்கலம். ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் தரையிறங்கப்போகிறோம் என்ற களிப்பில் இருந்தனர் சாதனை வீரர்கள். தரையை தொட இன்னும் 61,170 அடிகளே இருந்தன. தரையிறங்குவதற்கு முன்பாக ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோமே என்று 7 பேரும் இணைந்து போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.
அதில் இருவர் சாதனை மங்கைகள். அந்த இருவரில் ஒருவர் இந்தியாவின் கல்பனா சாவ்லா. அடுத்த 16 நிமிடங்களில் விண்கலம் சரியாக தரையிறங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. உலகமே விண்ணை பார்த்துக்கொண்டிருந்தது.
குறிப்பாக, விண்ணில் இருந்து தரையிறங்க இருந்த வீரர்களை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நொடியில்தான் சட்டென வெடித்துச்சிதறியது விண்கலம். சாதனையாளர்கள் அனைவரும் காற்றில் கரைந்தனர். அந்த நொடியில் வீரமங்கையான, இந்தியாவின் சார்பாக விண்ணுக்கு முதன்முதலாக பயணம் செய்திருந்த கல்பனாவை நினைத்து தேசமே அழுதது. இந்த நிகழ்வு நடந்து 21 ஆண்டுகள் ஆன நிலையில், கல்பனா சாவ்லா என்று கூறினால் இன்றளவும் சிலிர்ப்பு ஏற்படுகிறது. இந்த சிலிர்ப்புக்கு காரணம் என்ன? ஒட்டுமொத்த பெண்களுக்கும் கல்பனா சாவ்லா நம்பிக்கை நாயகியாக மாறியது எப்படி? என்பதை பார்க்கலாம்.
பனாரசி லால் - சஞ்சியோகி தம்பதிக்கு 3 குழந்தைகளுக்கு பிறகு, 4வதாக பிறக்கும் குழந்தை ஆண்குழந்தையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். அப்படி 1961ம் ஆண்டு 4வதாக ஒரு குழந்தை பிறந்தது. ஆனால், அது ஆண் குழந்தையல்ல. பிற்காலத்தில் வீரமங்கை என்று பேர் எடுத்து கல்பனா சாவ்லா எனும் பெண் குழந்தை. இயல்பாக குழந்தைகள் எல்லாம், பொம்மை, பூனை போன்று வரைந்து விளையாடியபோது, விமானத்தை வரைந்து பார்த்தார் கல்பனா சாவ்லா. நிலா, நட்சத்திரங்கள் என்று விண்வெளி உலகின் மீது தீரா காதல் கொண்டவர், விமானத்தின் சத்தத்தை கேட்கும்போதெல்லாம் குதூகளித்தார் கல்பனா.
சிறுவயது முதலே படிப்பில் அதிகம் கவனம் செலுத்திய அவர், மேற்படிப்பு படிக்கும்போது விமான பொறியியல் கல்வியை தேர்வு செய்தார். பஞ்சாப் பொறியியல் பள்ளியில், விமான பொறியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார் கல்பனா. தொடர்ந்து, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பு படித்தார். விண்வெளி பொறியியல் படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். அதைத்தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை வைத்து 1994ல் அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் இணைந்தார் கல்பனா.
விண்ணில் சென்று ஆய்வு செய்ய வேண்டுமானால் அதற்கு ஏற்றபடி உடலுக்கு பயிற்சி தேவை என்பதால், 14 மாத பிரத்யேக பயிற்சியை பெற்ற கல்பனா, 1996ல் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆக பதவி உயர்வு பெற்றார். 1997ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு பயணித்த விண்கலத்தில் கல்பனா சாவ்லா உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். இந்த பயணத்தில் 15 நாட்கள் ஆய்வை முடித்துக்கொண்டு விண்கலம் மீண்டும் பூமி திரும்பியது. அப்போது 252 முறை பூமியை சுற்றியிருந்தார் கல்பனா, 376 மணி நேரம் விண்ணில் செலவிட்டிருந்தார். கிட்டத்தட்ட இதன் தொலைவு 65 லட்சம் கிலோ மீட்டர்கள் ஆகும். அந்த நேரத்தில்தான் விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா. சுமார் 400 மணி நேரம் விண்ணில் பறந்த வீரமங்கை என்ற பெயரை பெற்றார் கல்பனா.
தொடர்ந்து, 2வது பயணத்தில் தேர்வான கல்பனா சாவ்லா, அதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். 2003 ஜனவரி 16ம் தேதி கொலம்பியாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது STS-107 விண்கலம். இதில் 5 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர், மற்றொருவர் அமெரிக்க குடியுறிமை பெற்ற இந்திய பெண். ஆம், அவர் பெயர்தான் கல்பனா. 80க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை முடித்துக்கொண்டு விண்கலம் பூமையை நோக்கி திரும்பியபோது வெடித்துச்சிதறியது. கல்பனாவை இறப்பு உட்பட வீரர்களின் இறப்பு ஒட்டுமொத்த உலக மக்களுமே கண்ணீர் வடித்தனர்.
அவரது மறைவுக்குப் பிறகு, வீரர் தீர செயல்களை புரிபவர்களுக்கு கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல இடங்கள் இன்றளவும் கல்பனாவின் பெயரை சுமந்து நிற்கிறது. அடிமைத்தனம், அடக்குமுறை என அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு இலக்கு நோக்கி பயணித்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருந்து வருகிறார் சிங்கப்பெண் கல்பனா. காலம் உள்ளவரை நினைவுகூறப்படுவீர்கள் கல்பனா...!