‘தனிமைக்கு விடுதலை’ - கம்போடியா சென்றது 'காவன்' யானை !

‘தனிமைக்கு விடுதலை’ - கம்போடியா சென்றது 'காவன்' யானை !
‘தனிமைக்கு விடுதலை’ - கம்போடியா சென்றது 'காவன்' யானை !
Published on

உலகின் தனிமையான யானை என அழைக்கப்படும் காவன், பாகிஸ்தானில் இருந்து கம்போடியாவுக்கு விமானம் மூலம் சென்றது.

தனிமை, விரக்தி, சோகம் நிறைந்த மனிதர்கள் சுவற்றில் தலையை மோதிக் கொண்டு தங்களது ஆற்றாமைக்கு தீர்வு காண்பது போல, பாகிஸ்தானில் வன உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த யானை காவன் சுவற்றில் முட்டிக் கொண்டு சோகமே வடிவாக நின்றது உலகம் முழுவதும் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை அரசு பரிசாக வழங்கியது தான் இந்த காவன் யானை. இதற்கு துணையாக 1990 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து சாஹ்லி என்ற பெண் யானை அழைத்து வரப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இரு யானைகளும் மகிழ்ச்சியுடன் இருந்த சூழலில், 2012 ஆம் ஆண்டு சாஹ்லியின் மரணம் காவனை வெகுவாகவே சோகத்தில் ஆழ்த்தியது. மனிதர்களை போல கூட்டமாக வாழும் பழக்கத்தை கொண்டவை யானைகள்.

இதனால், காவனை தனிமை வாட்டியது. அடிக்கடி சுவற்றில் தலையை மோதிக் கொண்டு தனது சோகத்திற்கான வடிகாலை தேடிக் கொண்டது காவன். இந்த புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள வன உயிரின ஆர்வலர்களை வேதனைப்படுத்தியது. உலகிலேயே தனிமையான யானை காவன் என்ற சோகப் பெயரும் அதற்கு வந்தது.

இந்தச் சூழலில் தான் அமெரிக்க பாடகரான செர், காவனை பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்து கம்போடியாவுக்கு அழைத்துச் செல்ல முன் வந்தார். இதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், காவனுக்கு தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் இருந்து விமானம் மூலம் காவன் இன்று கம்போடியாவுக்கு சென்றான்.

கம்போடியாவில் அங்கு வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மற்ற யானைகளுடன் காவன் சேர்க்கப்படுவான். யானையின் தனிமையை விரட்ட முயற்சி எடுத்த அமெரிக்க பாடகருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com