இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு ஜோர்டான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது ஜெருசலம். 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரின் போது இந்நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை இணைத்து நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவித்தால் அதை அங்கீகரிக்க தயார் என அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஜோர்டானும் இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்த முடிவை எடுத்தால் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக ட்ரம்ப் எந்த முடிவிற்கும் வரவில்லை என அவரது ஆலோசகர் குஷ்னர் தெரிவித்துள்ளார்.