அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டால்கம் பேபி பவுடர் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக திகழ்ந்து வந்தது. அப்படியான நிலையில்தான், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடரில் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுத்தும் துகள்கள் இருக்கிறதென்றும், இதனால் பல குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் கிளம்பின. மகளிருக்கும் இந்த பவுடரால் புற்றுநோய் ஆபத்துகள் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தன.
இதை முன்வைத்து 40,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் அமெரிக்காவில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தது ஜான்சன் அண்ட் ஜான்சன். அதே நேரத்தில் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பவுடர்களின் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. 2020-ல், அமெரிக்காவில் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு அடுத்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்குகளுக்கு நஷ்டஈடுகளாக மட்டும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பல பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது.
குறிப்பாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக 22 பெண்கள் தொடர்ந்த வழக்கில் 2 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. பின்னர் 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்படி தொடர்ந்துகொண்டிருந்த இந்த வழக்கு விசாரணையின்போது இந்நிறுவனத்தின் பவுடர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது அவற்றில் அமிலத்தன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளதென தெரியவந்தது.
அதையடுத்து, நஷ்ட ஈடு உத்தரவுக்கு எதிராக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை ஏற்ற நீதிமன்றம், நுகர்வோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2.1 பில்லியன் டாலராக குறைத்தது.
இதற்கிடையே நஷ்டஈடு வழக்குகள் அதிகரித்த நிலையில், நஷ்டஈடு வழக்குகளை கவனிக்க என தனியாக எல்டிஎல் என்ற இணை நிறுவனத்தை ஜான்சன் & ஜான்சன் உருவாக்கியது. ஆனால் சில நாட்களிலேயே எல்டிஎல் நிறுவனம் திவாலாகியதாக அறிவித்து, நஷ்டஈடு வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தியது ஜான்சன். இருப்பினும் நிறுவனம் திவாலானதை ஏற்க மறுத்த அமெரிக்க நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்கும் உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில் டால்கம் பேபி பவுடருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு 8.9 பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன்.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை. வழக்குகளை நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும். எங்களுடைய வணிகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். அதே வேளையில் நிவாரணம் கோருபவர்களுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்குவோம். தேவைப்பட்டால் வழக்குகளை எதிர்கொள்வதற்கான நிதி 12 பில்லியன் டாலராக உயர்த்தப்படும்”' என்று கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, 70,000 பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக (கர்பப்பை மற்றும் Mesothelioma வகை புற்றுநோய்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட) வாதாடும் வழக்கறிஞர்கள் குழுவொன்று, “இந்த ஒப்பந்த அறிவிப்பு, மகப்பேறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றுள்ளது.
இந்த அறிவிப்புக்கு நீதிமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.