ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் தொடங்கப்பட்டு 1 வருடங்கள் நிறைவு செய்யவுள்ளதை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர் தொடங்கி ஓராண்டு
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்ய படைகளை உக்ரைனுக்கு அனுப்பியதிலிருந்து இந்தப் போர் தொடங்கியது. போர் தொடங்கப்பட்டதிலிருந்தே உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு கரம் நீட்டிவருவதோடு, ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியை அளித்தும் வருகின்றன.
கடந்த ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளையும், அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் நேரில் சென்று சந்தித்தனர். ஆனால், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் உலகின் இரண்டு பெரிய அணுசக்தி சக்தி நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, ஜோ பைடன் உக்ரைனுக்கு செல்வதை தவிர்த்தே வந்தார். ஆனால், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்த, மூத்த உதவியாளர்களை அனுப்பியிருந்தார். மேலும், கடந்தாண்டு மே மாதம், ஜோ பைடன் மனைவியான ஜில் பைடன் மேற்கு உக்ரைன் பகுதிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருந்தார்.
போர் தொடங்கப்பட்டு ஒரு வருடகாலம் முடிவடைய உள்ள நிலையில், ”ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை, ஆனால் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அதுவரை உக்ரைனை அமெரிக்கா ஆதரிக்கும்” என்று தெரிவித்திருந்தார் ஜோ பைடன்.
இந்நிலையில்தான், தற்போது உக்ரைனுக்கு திடீர் ரகசிய பயணமாக சென்றுள்ளார் ஜோ பைடன். உக்ரைனுக்கு அவர் சென்று, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரையில், அவர் உக்ரைனுக்கு சென்றுள்ள தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட தலைநகர் கீவிற்கு சென்ற பைடன், அங்கு உயிரிழந்த உக்ரன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
ஒரு வருடமாக ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்துவரும் நிலையில், திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் சென்றிருப்பது, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜோ பைடனின் இந்த பயணத்திற்கு பிறகு, உக்ரைனுக்கு ஆதரவாக வேறு ஏதாவது அறிவிப்பை அமெரிக்கா அறிவிக்ககூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.