அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர். ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ”விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்” என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “விவாத நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன்பாக நான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதில் மிகவும் சோர்வாக இருந்தேன். இந்த விவகாரத்தை நான் சரிவர கையாளவில்லை.
எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன். நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.